IPL 2022 CSK vs MI- பிட்ச் எப்படி இருந்தாலும் 130 ரன்களுக்குக் கீழ் எடுத்தால் வெற்றி வாய்ப்பு இல்லை- தோனி பேட்டி


IPL 2022 CSK vs MI- பிட்ச் எப்படி இருந்தாலும் 130 ரன்களுக்குக் கீழ் எடுத்தால் வெற்றி வாய்ப்பு இல்லை- தோனி பேட்டி


வான்கடேயில் நேற்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வேட்டையாக அமைந்ததில் சிஎஸ்கே அணி 97 ரன்களுக்குச் சுருள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இலக்கை 15வது ஓவரில் 103/5 என்று போராடி வெற்றி பெற்றனர்.சென்னைசூப்பர் கிங்ஸ்னா தோனி, தோனீன்னா சிஎஸ்கே என்பதற்கு இணங்க அவர் மட்டுமே கேப்டனாக 33 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்குமே அவர் தான் ஹை ஸ்கோர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சாம்ஸ் அபாரமாகத் தொடங்கி 3 விக்கெட்டுகளைக் கழற்ற ரைலி மெரிடித், ஸ்பின்னர் குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ராவை ஆட முடியவில்லை 12 ரன் 1 விக்கெட். தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸும் திணறியது முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளை எடுத்தார். ரோஹித் சர்மா 4 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்ததால் பவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 33 ரன்களை எடுத்தது மும்பை பிறகு ஹிருதிக் ஷோகீன், 18, திலக் வர்மா, 34 இருவரும் சேர்ந்து ஸ்கோரை 81 ரன்களுக்கு உயர்த்த மலை மனிதன் டிம் டேவிட் இறங்கி 2 சிக்சர்களுடன் மும்பையை வெற்றி பெறச் செய்தார்.

பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை முற்றிலும் இழந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆட்டம் முடிந்து தோனி கூறியதாவது:

பிட்ச் என்ன மாதிரியாக இருந்தாலும் 130 ரன்களுக்குக் கீழ் எந்த ஒரு இலக்கும் வெற்றி இலக்காக இருக்க முடியாது,நான் பவுலர்களிடம் கூறியது இதுதான், நல்ல தரமாக வீசுங்கள், எதிரணிக்கு பிரஷர் கொடுங்கள், வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாதீர்கள். முகேஷ், சிமர்ஜீத் இருவரும் அருமையாக வீசினார்கள்.

இந்த மாதிரி லோ ஸ்கோர் ஆட்டங்கள் அவர்களுக்கு உண்மையில் உதவும் அவர்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதாவது எப்போது நாம் தொடங்கினாலும் இதே போன்று வீச வேண்டும் என்ற அணுகுமுறையை வளர்க்கும்.

இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து...

இப்படிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் நல்லது, ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சில் இவ்வளவு பெஞ்ச் ஸ்ட்ரெந்த் நம்மிடம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் முதிர்ச்சியடைய கால அவகாசம் எடுத்து கொள்வார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் யாராவது ஒருவர் 3 வடிவங்களுக்கும் தயாராகி விடுவார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டினால் இந்த நன்மை நடந்துள்ளது. இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு, அவர்களில் பலர் மிகவும் தைரியசாலிகளாக இருக்கிறார்கள். அதிக ஆட்டங்களில் இவர்கள் ஆட ஆட அவர்களுக்கான நம்பிக்கை வளர்ந்து திட்டங்களை சரியாகச் செயல்படுத்துவார்கள்.

சிஎஸ்கே எதிர்காலம் பற்றி...

முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங் நல்ல முறையில் இந்த ஐபிஎல் தொடரில் செயல்பட்டது எதிர்காலத்துக்கான ஒரு அடித்தளம் தான். இன்னும் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்த தொடருக்கு வருகிறார்கள். அடுத்த சீசனுக்கு முன் நன்றாகத் தயாரித்துக் கொள்ள போதிய காலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே இந்த சீசனில் சில பாசிட்டிவ்கள் இருந்தன, அதை அடுத்த சீசனுக்குக் கடத்துவோம், பீல்டிங் ஒரு ஏரியா முன்னேற்றம் தேவை அதே போல் இருக்கும் ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

பேட்டர்களிடம் என்ன கூறினார்?

கடும் நெருக்கடியில் ஆடும்போது முதல் சில பந்துகள் முக்கியம்.நீங்கள் நீங்களாக இருங்கள் என்றேன், முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டுமா அடியுங்கள் என்றேன். அது கைகூடவில்லை. ஆனால் மும்பைஇந்தியன்ஸ் அருமையாக வீசினர். நாங்களும் கொஞ்சம் எங்களை அப்ளை செய்து ஆடியிருக்க வேண்டும். எங்களில் சில பேட்டர்கள் நல்ல பந்தில் அவுட் ஆனார்கள், அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. மற்றபடி இப்படிப்பட்ட மேட்ச்களில்தான் நாம் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு போட்டியிலிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் தோனி.

Comments

Popular posts from this blog